Manickavasagar
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் மதுரைக்கு ஏழு மைல் தூரத்தில் உள்ள திருவாதவூர் என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றினார். சம்புபாதசாரியார், சிவஞானவதியார் தம்பதியருக்கு மகனாகத் தோன்றிய இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர்.

பதினாறு வயதுக்குள் எல்லா நூல்களிலும் வல்லவராக விளங்கினார். இவரது தனித்தன்மையைக் கண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தனன், இவரை தனது முதலமைச்சராக்கிக் கொண்டான். "தென்னவன் பிரம்மராயன்" என்ற பட்டமும் வழங்கிச் சிறப்பித்தான். வாதவூரர் மன்னனுக்குத் துணையாக இருந்து நாட்டை வளப்படுத்தி நல்லாட்சி நடக்கச் செய்தாலும், அவரது மனம் மட்டும் சிவபெருமான்மீது பேரன்பு கொண்டது. தனக்கு ஞானம் தரவல்ல நல்லாசிரியரைக் காட்டுமாறு இறைவனிடம் நாள்தோறும் வேண்டி நின்றhர்.

ஒருநாள் சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்து இறங்கியுள்ளன என்று ஒற்றர்கள் சிலர் தெரிவித்தனர். குதிரைப் படையை வலிமைப்படுத்த எண்ணியிருந்த பாண்டிய மன்னன் இச்செய்தியைக் கேட்டு நல்ல குதிரைகளை வாங்கி வருமாறு மிக்கப் பொன் கொடுத்து வாதவூரரை அனுப்பினான். கீழக்கடற்கரையை நோக்கிப் புறப்பட்ட வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார்.

அங்கு ஒரு பூஞ்சோலையில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவான சிவபெருமான் அடியார் புடைசூழ வீற்றிருக்கும் காட்சியைக் கண்டார். குருமூர்த்தியின் திருவடிகளில் விழுந்து வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டுமென்று வேண்டினார். சிவபெருமான் தனது திருக்கண்ணால் நோக்கி, திருவைந்தெழுத்தை ஓதி ஞானதீக்கை செய்வித்தார். சிவஞானம் கைவரப் பெற்ற வாதவூரர் உள்ளம் உருக பல பாடல்களைப் பாடித் துதித்தார். இப்பாடல்கள் அருளொளி வீசும் மாணிக்கமாகத் திகழ்ந்ததால் இறைவன் இவருக்கு "மாணிக்கவாசகர்" என்ற பெயரைச் சூட்டினார்.

மாணிக்கவாசகர் தாம் கொண்டு வந்த பொருளையெல்லாம் திருப்பெருந்துறை கோயிலைப் புதுப்பிக்க செலவிட்டார். இதை அறிந்த அரசன் அவரை மதுரைக்கு வருமாறு ஆணையிட்டான். மணிவாசகர் இறைவனிடம் முறையிட, "அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று மன்னனிடம் சொல்லுக" என்று அசரீரி கூறியது.

வாதவூரர் கொண்டு சென்ற பொருளையெல்லாம் ஆலயப்பணியில் செலவழித்துவிட்டார் என்ற செய்தியை அறிந்த பாண்டியன் அவரைச் சிறையில் அடைத்தான். ஆவணி மூலத்தன்று ஆலவாய் அண்ணல் நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். மன்னனும் வாதவூரரை விடுவித்து பிழைபொறுக்க வேண்டினான்.

ஆனால் நள்ளிரவில் குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடி மறைந்தன. இச்செய்தியைக் கேள்விப்பட்ட மன்னன் கடுஞ்சினங்கொண்டு வாதவூரரை சிறையில் அடைத்தும், வைகை ஆற்றின் சுடுமணலில் நிறுத்தியும் துன்புறுத்தினான். வாதவூரர் சிவபெருமானை வேண்டி நிற்க, வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மதுரை நகருக்குள் புகுந்தது. வீட்டிற்கு ஒருவர் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று பாண்டியன் கட்டளையிட்டான்.

வந்தி என்னும் பிட்டு விற்கும் மூதாட்டி கரையை அடைக்க ஆளில்லாமல் இறைவனிடம் வேண்டினாள். சொக்கநாதர் கூலியாளாக வந்து பிட்டை உண்டு, கரையை அடைக்காமல் விளையாடி உறங்கிக் கொண்டிருந்தார். பார்வையிட வந்த பாண்டியன் அவரைப் பிரம்பால் அடித்தான். அந்த அடி அண்டசராசரத்திலுள்ள அனைத்து உயிரினங்கள் மீதும் பட்டது. கூலியாளாக வந்த சிவபெருமான் மறைந்தார். வெள்ளமும் குறைந்தது. மன்னவன் இவை யாவும் இறைவனின் திருவிளையாடல் என்று தெளிந்து வாதவூரரை விடுதலை செய்து அவர் திருவடிகளில் விழுந்து வணங்கிப் பிழை பொறுத்தருள வேண்டினான்.

மணிவாசகர் மன்னனை தேற்றி துறவு பூண்டு மதுரையிலிருந்து புறப்பட்டு பல தலங்களைத் தரிசனம் செய்து சென்று சேர்ந்தார். அங்கு பல பாடல்களைப் பாடியருளினார். இலங்கையிலிருந்து வந்த புத்த சமயத்தவரை வாதில் வென்று, இலங்கை மன்னனின் ஊமை மகளை பேச வைத்தார்.

ஒருநாள் அம்பலவாணன் அந்தணர் வடிவங்கொண்டு, இவரை நாடி வந்து, இவர் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் பாடும்படி கேட்டு ஒலையில் எழுதிக் கொண்டார். பின்னர், "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று, தில்லைநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட திருக்கோவையையும் எழுதிக் கொண்டார். ஓலையின் இறுதியில் "மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது" எனக் கையொப்பமிட்டு பொற்சபையின் பஞ்சாக்கப்படியில் வைத்துவிட்டு மறைந்தார்.

தில்லைவாழ் அந்தணர்கள் அவ்வேட்டினைக் கண்டு படித்துப் பார்த்து, மாணிக்கவாசகரை அணுகி அப்பாடல்களுக்கு பொருள் கூற வேண்டினர். மணிவாசகர் நடராஜப்பெருமான் முன் நின்று "இப்பாடல்களுக்குப் பொருள் இந்த தில்லைக் கூத்தனே" என்று கூறினார். ஆனி மாத மக நன்னாளான அன்று மாணிக்கவாசகர் அங்கு தோன்றிய சோதியுள் இறைவனுடன் ஒன்றhகக் கலந்தார்.

இவர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

எட்டாம் திருமுறை

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.